Tuesday, August 11, 2009

திருவள்ளுவரை எதிர்த்து சிறியவர் ஆகா வேண்டாம்

கன்னட பத்திரிக்கையாளர் பத்மராஜு தன்டாவதி

-கன்னட பத்திரிகை ப்ரஜாவாணியில் வெளிவந்தது (Aug 8 2009)


திருவள்ளுவர் தமிழ் நாட்டை சேர்ந்தவர். பெரும் புலவர், ஏசு கிறிஸ்து பிறப்பதற்கு முப்பது ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர். அவர் வெறும் புலவர் மட்டுமல்ல, மகா ஞானி. அவர் எழுதியது திருக்குறள் - 133 அதிகாரங்கள், 1330 குறள்கள்.

அறம், பொருள், இன்பம் என்று மூன்று பாகங்களில் எப்படி வாழ வேண்டும் என்பதை காட்டிவிட்டார். வாழும் கலையை சொல்லி விட்டார்.

திருக்குறள் காட்டும் நீதி ஒருவருக்கு அல்ல. ஒரு சமூகத்திற்கு அல்ல. ஒரு மதத்திற்கு அல்ல. உலகில் வாழும் ஒவ்வொரு மனிதருக்கும் பொருந்தும்.

தமிழ்நாடு தந்த திருவள்ளுவரை போல ஒருவரை எந்த ஒரு மாநிலமும் தந்தது இல்லை, தரப்போவதும் இல்லை.

திருவள்ளுவருடைய சாதி, மதம் தெரியாது. சைவர், வைஷ்ணவர், சமணர், புத்த மதங்கள் வள்ளுவரை சொந்தம் கொண்டாடுகின்றன. அனால் அவர் மதங்களை கடந்தவர். மனித குலமே அவரது குலம் என்பது மட்டுமே உண்மை.

பெங்களூர் அலசூர் தமிழ் சங்கம் அருகே திருவள்ளுவர் சிலை வைக்கப்பட்டது. அனால் சிலையை திறக்க கன்னட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. அப்போது திருவள்ளுவர் பற்றி தெரிந்து கொள்ள எனக்கு ஆர்வம் ஏற்பட்டது. படித்து தெரிந்து கொண்டேன். கன்னட அமைப்புகளின் எதிர்ப்பு எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

நமக்கு பக்கத்தில் இருக்கும் மாநிலத்தில் வாழ்ந்த ஒரு பெரும் புலவரை நாம் அறிந்து கொள்ளாமல், தெரிந்து கொள்ளாமல் இருக்கிறோமே என்ற வேதனை என் நெஞ்சத்தை வாட்டியது.

நாம் எதை எதிர்க்க வேண்டும்? தமிழ்நாடு - கர்நாடகம் இடையே நீண்டகாலமாக நிலவி வரும் பிரிச்சனைகளுக்கும், திருவள்ளுவர் சிலைக்கும் என்ன சம்பந்தம்? சிலை திறப்பை ஏன் எதிர்க்க வேண்டும்?

பெங்களூரில் திருவள்ளுவர் சிலை திறக்கபடுகிறது. அதே போல சென்னையில் சர்வக்ஞர் சிலை திறக்கப்படுகிறது. இரு மாநில அரசுகளும் இதை ஒப்புக்கொண்டு இருக்கிறது.

தமிழ்நாடு முதல்வர் கருணாநிதி பெங்களூரில் திருவள்ளுவர் சிலை திறக்கிறார். கர்நாடக முதல்வர் எடியூரப்பா சென்னையில் சர்வக்ஞர் சிலை திறக்கிறார். எவ்வளவு மகத்தான நிகழ்வு இது? இதை விட வேறு என்ன வேண்டும்? இரு மாநில மக்களும் பெருமைப்பட வேண்டிய விடையமல்லையா இது? 18 ஆண்டுகளாக திருவள்ளுவர் சிலை மூடிக்கிடக்கிறது.

கன்னட பவனில் 6 ஆண்டுகளாக சர்வக்ஞர் சிலை கிடக்கிறது. இது வேதனை இல்லையா? கன்னட அமைப்புகள் இதன் மூலம் என்ன சாதித்து விட்டார்கள்?

திருவள்ளுவர், சர்வக்ஞர் போன்றோர் வெறும் கவிஞர்களோ, புலவர்களோ அல்ல. அவர்கள் மனித குலத்தை வாழ வைக்க, வழிகாட்ட வந்த ஞானிகள். அவர்களை கட்டிப்போடலாமா? அவர்களை ஒரு மாநிலத்துக்குள்ளே அடைத்து வைக்கலாமா?

பம்பா, குவெம்பு, கார், மாஸ்தி, ஆனந்தமுர்த்தி, பீம்சேன் ஜோஷி, கங்குபாய், குமார கந்தர்வா ஆகியோரை இந்த மாநிலத்துக்கு மட்டுமே உரியவர்கள் என்று கூறலாமா?
கன்னட இலக்கியங்கள் வேறு மொழிகளில் பெயர்க்கப்பட்டுள்ளன. அவைகளை அந்தந்த மொழி பேசும் மக்கள் ஏற்று கொள்ள வில்லையா? அங்கு அவை மொழி, இனம், மாநிலம், எல்லாம் கடந்தல்லவா நிற்கிறது? பைபிள், குரானை அடுத்து உலகில் அதிகமான மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டிருப்பது திருக்குறள் தான். அது எப்படி சாத்தியமானது?

சில தினங்களுக்கு முன்பு தான் வீரப்ப மொய்லி எழுதிய ராமாயண புத்தகத்தை தமிழக முதல்வர் கருணாநிதி வெளியிட்டார். அதற்கும் முன்பாக கன்னட மூத்த அறிஞர் நாவல் ஆசிரியர் சேஷ நாராயணாவுக்கு தமிழ் மற்றும் கன்னட மொழிகளில் மொழி பெயர்ப்பு செய்ததற்காக தமிழக அரசின் உயரிய கலை மாமணி விருது வழங்கி கவுரவப்படுத்தியுள்ளது. இப்படி நாம் யாரையாவது பெருமை படுத்தி இருக்கிறோமா?

ராமேஸ்வர் தாகூர் கவர்னாராக இருத்த பொது ஆந்திராவை சேர்ந்த ராஜலட்சுமி என்பவரை பெங்களூர் பல்கலை கழக சிண்டிகேட் உறுப்பினராக நியமித்தார். அதை நாம் சகித்து கொள்ளவில்லை. எதிர்த்தோம். அவருடைய அறிவு, திறமை பற்றி யாருக்கும் சந்தேகம் இல்லை. அவர் ஆந்திராவை சேர்ந்தவர் என்ற ஒரே காரணத்தால் எதிர்த்தோம்.

ஆனால் நம்முடைய அனந்த மூர்த்தியை கேரளா காந்தி பல்கலைகழகத்து துணை வேந்தராக அதற்கு முன்பே நியமிக்கப்பட்டு இருந்தது நமது கவனத்துக்கு ஏனோ வரவில்லை.

பி. வி. காரந்த் அவர்களை மத்திய பிரதேச அரசும் அழைத்து பதவி வழங்கி கவுரவித்தது. சமீபத்தில் கர்நாடகத்தை சேர்ந்த ஏன். எஸ். ராமேகவுடா சிக்கிம் மாநில துணை வேந்தராக நியம்மிக்கபட்டார். அப்போதெல்லாம் நாம் வாய் மூடி மவுனமாக இருந்தோம்.

தமிழ் நாட்டோடு காவேரி நதி நீர் பிரச்சனை இருப்பது உண்மைதான். காவேரி காலம் காலமாக தமிழ்நாட்டிலும் பாய்ந்து வருகிறது. தமிழ்நாடு கர்நாடகத்தை விட தாழ்வான நிலப்பகுதி. திருவள்ளுவர் சிலையை திறக்கவிடாமல் தடுத்து விட்டால் காவேரி கர்நாடகத்தோடு மட்டுமே நின்று விடுமா என்ன?

திருவள்ளுவர் சாதி மதங்களை கடந்த புலவர். சர்வக்ஞர் தாழ்ந்த கும்பார வகுப்பை சேர்ந்தவர். அவர்கள் உயர்ந்த வகுப்பை சேர்ந்து இருந்தால் எந்த தடையும் வந்து இருக்காது. எதையும் ஆராய்ந்து பார்க்காமல் பிரச்சனைக்கு வழி ஏற்படாது. திருவள்ளுவர் மொழியை கடந்தவர். அவருக்கு வைக்கப்படும் சிலை ஒரு அடையாளம். அவர் அனைவருக்கும் பொதுவானவர்.

கன்யாகுமரயில் திருவள்ளுவரது 133 அடி சிலை உள்ளது. அத்தகைய உன்னதமான ஒருவரது சிலையை பெங்களூரில் திறப்பதை யாரும் தடுக்க வேண்டாம். அவ்வாறு தடுத்தால் கன்னடியர்கள் சிறுமை படைத்தவர்கள். குறுகிய மனம் கொண்டவர்கள் என்ற பழிச்சொல்லுக்கு ஆளாக நேரிடும். அது நமக்கு வேண்டாம்.

Sunday, August 09, 2009

பெங்களூர் திருவள்ளுவர் சிலை திறப்பு விழா

பெங்களூர் பயணத்திற்கு தயாரான எனக்கு அப்பா ஒரு வேண்டுகோள் விடுத்தார். ஆகஸ்ட் 9 ஆம் நாளுக்குள் வந்து விடு, அன்று தான் திருவள்ளுவர் சிலை திறப்பு விழா என்று முடிவாகியுள்ளது என்று. ஆகஸ்ட் 6 ஆம் நாள் பெங்களூர் சென்று அடைந்தேன். ஆகஸ்ட் 8 ஆம் நாள் இரவே தந்தை வீட்டிற்கு சென்று அடுத்த நாள் காலை நிகழ்ச்சிக்கு தயாராகி விட்டோம். காரணம்? ஆகஸ்ட் 8 ஆம் நாளன்று பெங்களூரில் ஆங்காங்கே சிறிய அளவில் வன்முறை வெடிக்க தொடங்கியது - சாலையில் தொடர்ந்து 10 கார்களின் டயரில் இருந்து காற்றை வெளியேற்றி நிற்க வைப்பது, கல்லெறிந்து பஸ்களை நாசமாக்குவது இப்படி. தும்கூர், ஷிமோக ஆகிய ஊர்களில் வாட்டாள் நாகராஜ் மற்றும் நாராயண கௌடாவினுடைய ஆட்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்து கொஞ்சம் வெறியாட்டம் ஆடினார்கள். ஆனால் எடியூரப்பா உடனடியாக செயலில் இறங்கி, வாட்டாள் நாகராஜ், நாராயண கௌடா மற்றும் அவர்கள் ஆட்கள் 350 பேரை "preventive custody" என்று கூறி சிறையில் அடைத்தார். அடுத்த நாள் அவர்கள் கூட்டியிருந்த பந்தும் செயலற்று போனது.


கர்நாடக அரசு VIP அழைப்பிதழ் நிகழ்ச்சி காலை 10 மணிக்கு ஆரம்பம், சிலை திறப்பு 11 மணிக்கு என்று கூறியது. நாங்கள் காலை 8 மணிக்கு புறப்பட்டு அரங்கத்திற்கு நடந்தோம். RBANMS மைதானத்தில் நிகழ்ச்சி. அலசூர் ஏரியை சுற்றி நடந்தோம். 18 ஆண்டுகளாக இதற்கு தானே காத்துக்கொண்டிருந்தோம்?

பல நினைவுகள் மனதில் உலா வந்தன. நான் பெங்களூரில் வளர்ந்த பொழுது பெங்களூர் தமிழ் சங்கத்தலைவர் திரு நீலகண்டன் அகாலமாக மறைந்தது. தமிழ் சங்க வளர்ச்சிக்கு அயராமல் உழைத்த அவர் நினைவாக, அலசூர் ஏரியை ஒட்டி தமிழ் சங்கம் இருக்கும் அண்ணா சுவாமி முதலியார் தெருவின் கோடியில் இருக்கும் வட்டத்திற்கு "நீலகண்டன் வட்டம்" என்று பெயர் சூட்டியது. பிறகு அந்த வட்டத்திற்குள் இருக்கும் பூங்காவில் திருவள்ளுவர் சிலை ஒன்றை நிறுவ முடிவெடுத்தது. பிறகு 1991 செப்டம்பர் 1 ஆம் நாள் அச்சிலையை முதல்வர் பங்காரப்பா, எங்கள் தொகுதி MLA கே ஜெ ஜார்ஜ் தலைமையில் திறந்து வைப்பதாக இருந்தது. பிறகு ஆகஸ்ட் 27 ஆம் தேதி முதல் முதலாக ஒரு கன்னட அமைப்பு அதற்கு எதிர்ப்பு தெரிவித்தது. விழா நடப்பதற்கு முதல் நாள் சிலை திறக்க கூடாது என்று வழக்கு தொடர்ந்தது. அதை விசாரித்த கர்நாடக ஐ கோர்ட் விழாவிற்கு தடை விதித்தது. பிறகு ஒரு கோணிப்பையை எடுத்து பெங்களுரு போலீஸ் ஏளனத்துடன் அந்த சிலை மேல் போர்த்தியது. பிறகு அந்த அலசூர் ஏரியை சுற்றி நடக்கும் போதெல்லாம் மூடிய அந்த சிலையைப்பார்த்து இதயம் வலித்தது. வள்ளுவரே - உன்னை கேவலப்படுத்தும் நிலையில் அல்லவா நாங்கள் விட்டு விட்டோம் ? இதை என்று நாங்கள் மாற்றப்போகிறோம் என்று உள்ளத்துக்குள் குமுறியது. இப்படி எண்ண அலைகள். 18 ஆண்டுகள் ஓடி விட்டன. என் 20 ஆண்டு அமெரிக்க வாழ்க்கை முடிந்து என் ஊர் திரும்புகிறேன். இதை விட மகிழ்ச்சியான செய்தி பெங்களூரில் வேறு என்ன இருக்க முடியும்?



பெங்களூர் தமிழ் சங்கமும் 18 ஆண்டு காலமாக எவ்வளவோ போராடிப்பார்த்தது. தொடர்ந்து வந்த முதல்வர்களிடம் - பங்காரப்பா, வீரப்ப மொய்லி, தேவே கௌடா, ஜெ .எச். பாட்டில், எஸ்.எம். கிருஷ்ணா, தரம் சிங்க், எச். டி. குமாரஸ்வாமி - கேட்டுப் பார்த்து. குடியரசுத் தலைவர்களிடம் கேட்டுப் பார்த்தது. தமிழக முதல்வர்களிடம் முறையிட்டுப் பார்த்தது. ஒன்றும் நடக்க வில்லை. பிறகு காலம் கனிந்தது. தலைவர்கள் மாறினர். எண்ணங்கள் மாறியது. எடியூரப்பா அவர்களுக்கும், கலைஞர் கருணாநிதிக்கும் ஒரு தனிப்பட்ட நட்பு உருவாகியது. ஒரு சுமூகமான தீர்வு ஏற்பட்டது. சென்னையில் சர்வக்ஞர்யருக்கு ஓர் சிலை என்றும் பெங்களூரில் திருவள்ளுவருக்கு ஓர் சிலை என்றும் முடிவானது. எடியூரப்பா அனைத்து கன்னட அறிஞரையும் அழைத்து இதை குறித்து பேசினார். குறிப்பாக இதற்கு பல முறை எதிர்ப்பு தெரிவித்த இந்நாள் எதிர் கட்சித்தலைவர் சித்தராமையா அவர்களையும் கலந்து பேசி சம்மதிக்க வைத்தார். கன்னட புலவர்களான திரு. பாட்டில் புட்டப்பா, திரு.சந்திரசேகர கம்பார், திரு.ஹம்பா நகரஜையா, ஞானபீட விருது பெற்ற திரு. அனந்தமூர்த்தி, அராய்ச்சியாளர் திரு. சிதானந்தமூர்த்தி, திரு.சித்தலிங்கையா மற்றும் திரு. நானையா அவர்களும் திருவள்ளுவரை போற்றி பேசி இந்த சிலை திறப்பை வரவேற்றனர். ஆனால் இவர்கள் அனைவரையும் ஒன்று சேர்த்து ஒரு ஒற்றுமையை கொண்டு வந்த பெருமை நிச்சயமாக திரு. எடியூரப்பா அவர்களையே சாரும்.


விழாவிற்கு சுமார் 30,000 பேர் கூடினர். வழி நெடுக இரு முதலமைச்சர்களை வாழ்த்தியும், குறிப்பாக கலைஞர் அவர்களை வாழ்த்தியும் கட்-அவுட்களும், பேனர்களும் இருந்தன. தமிழக விருந்தினர்கள் - அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, துரை முருகன், பரிதி இளம்வழுதி, பொன்முடி, மத்திய அமைச்சர் ராசா, வீரபாண்டி ஆறுமுகம், சபாநாயகர் ஆவுடையப்பன், மற்றும் தயாளு அம்மாள், கலைஞர் மகள் செல்வி, அவர் கணவர் செல்வம் வந்திருந்தனர். கலைஞர் அவர் உரையில் வைரமுத்துவை குறிப்பிட்டார் - ஆனால் அவரை பார்க்க முடியவில்லை. VIP பாஸ் இல்லாமல் வந்த திரு. வீரபாண்டி ஆறுமுகத்தை அடையாளம் தெரியாமல் காவல் துறையினர் உள்ளே விட மறுக்க, அவர் உதவிக்கு சென்றவர் நமக்கு நன்று பரிச்சயமான டாக்டர். மயில்சாமி அண்ணாதுரை!

விழா ஒரு இசை நிகழ்ச்சியுடன் 10 மணிக்கு தொடங்கியது. கன்னட நாட்டின் பெருமையை பறை சாற்றி பாடல்கள் இருந்தன. மறந்தும் தமிழ் பாடல்களை அவர்கள் பாடவில்லை. எங்கிருந்தாலும் கன்னடனாக இரு, கன்னட நாட்டிற்கு பெருமை சேர் என்றும் பாடல்கள் அமைந்து இருந்தன. 10:45 மணிக்கு எடியூரப்பா அவர்கள் அவைக்கு வந்து எல்லா ஏற்பாடுகளையும் பார்வையிட்டு சென்றார். 11:30 மணிக்கு வெளியில் ஒரே சத்தம், விசில் பறந்தது. கலைஞர் வந்து விட்டார் என்று அவையில் அமர்ந்தோர் அறிந்தனர். 11:35 மணிக்கு மேடையில் வந்து அமர்ந்தார். 11:37 மணிக்கு கன்னட வாழ்த்து பாடலுடன் சிலை திறப்பு விழா தொடங்கியது. வெங்கையா நாயிடு கலைஞர் பக்கத்தில் அமர்ந்து, இரு முதலமைச்சர்களுக்கும் மொழி பெயர்ப்பாளராக இருந்தார்.


சிலையை 12 மணிக்கு ரிமோட்-control பட்டனை அழுத்தி திறந்து வைத்தார். வெளியில் பட்டாசு சத்தம் ஒரு 5 நிமிடங்களுக்கு காதை பிளந்தது. அந்த சிலையை பார்த்ததும் பலர் ஆனந்த கண்ணீர் வடித்தனர். அதில் அடியேனும் ஒருவன். எத்தனை ஆண்டுகள் இதை காண காத்திருந்தோம்! சீரிய பார்வையுடன், ஒரு கம்பீர சிரிப்போடு வீற்று இருந்தார் திருவள்ளுவர்! ஒரே கை தட்டல், ஒரே விசில் சத்தம். அவை அதம் பறந்தது. சத்தம் அடங்கியதும் கலைஞர் அவருக்கே உரிய பாணியில் அழகாக உரை ஆற்றினார். அவர் மேல் ஈழ விடயத்தில் எனக்கு இருந்த கோபம் மிக மிக லேசாக குறைந்தது. 18 ஆண்டுகளாக தான் பெங்களூரில் எந்த ஒரு பொது விழாவிலும் - கட்சியாகட்டும், இலக்கியமாகட்டும் - கலந்து கொள்வதில்லை என்று சபதம் எடுத்திருந்ததாகவும், அதை இந்த விழாவுடன் முடித்து விட்டதாகவும் கூறினார். இது ஒரு சிலை திறப்பு விழா மட்டுமல்ல - இரு மாநிலங்களின் மக்களின் இதயத்தை திறக்கும் விழா என்று கூறினார். சர்வக்ஞரின் நூல்களை திரு. இறையடியான் தமிழில் மொழி பெயற்று வருவதாகவும், சர்வக்ஞர் மிகவும் பிற்படுத்தபட்ட வகுப்பை சேர்ந்தவர் என்றும், அவர் சமூக அவலங்களை தன் பாடல்களில் சாடியவர் என்றும் கூறினார். பல முற்போக்கு கருத்துக்களை கூறியவர் என்றும் சாதி-மத பேதமற்ற சமுதாயத்தை விரும்பியர் எனவும் கூறினார். அவர் சிலை சென்னையில் திறக்க வேண்டும் என்று கூறிய பொழுது ஒரு தமிழன் கூட அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்று அவர் கூறியபொழுது கை தட்டல் காதை பிளந்தது.

இந்த சிலை திறப்பில் ஒரு அரசியலும் இல்லை, வெறும் அகவியல் தான் என்று அழகாக கூறினார். கங்கை நதியில் நீராடினால் மோட்சம் அடைவீர்கள் என்று கூறுபவரே, தவளையும், மீனும், தேளும் தான் அந்த நீரில் இருக்கின்றன - அவை சொர்க்கம் செல்லுமா? என்று சர்வக்ஞர் கூறிய பாடலை கூறி தானும் அவரை படித்துள்ளதாக கூறினார். 500 ஆண்டுகளுக்கு முன்னாள் தோன்றிய சர்வக்ஞரின் பாடல்களில் திருவள்ளுவரின் தாக்கமும், சித்தர்களின் தாக்கமும் இருப்பதாக அவர் கூறினார். துளுவும், கன்னடமும், தெலுங்கும், மலையாளமும், தமிழும் ஒரே திராவிட மொழி குடும்பத்தை சேர்ந்த மொழிகள் - எனவே நம்மை நாம் இன்னும் நன்றாக அறிந்து கொள்ள வேண்டும் என்றும் கூறினார். எனக்கு 86 வயது, எடியூரப்பாவிற்கு 67 வயது எனிவே நான் அவரை தம்பி என்று அழைக்கிறேன் என்றார். இந்த இரு சகோதரர்களும், இரு மாநிலங்களின் உறவை வலுப்படித்தி மற்றவர்களுக்கு ஒரு வழிகாட்டியாக விளங்க வேண்டும் என்றும் கூறினார்.

பிறகு பேசிய திரு. எடியூரப்பா இரு மாநில மக்களும் ஒரு தாய் மக்களே என்று பேசினார். திருக்குறளை போற்றி பேசிய அவர், நாடு, மொழி, மதம், இனம், என்ற எல்லைகளுக்கு அப்பாற்பட்டவர் திருவள்ளுவர் என்று கூறினார். திருவள்ளுவரின் நூல் பல உலக மொழிகளிலே மொழி பெயர்க்கப்பட்டு இருக்கின்றது. அதன் கருத்துக்கள் எல்லோரையும் சென்று அடைய வேண்டும் என்று கூறினார். வேதத்தை போல, பைபிளை போல, குரானை போல தமிழர்களால் இது போற்றப்படுகின்றது என்றும் இவர் கூறினார். இதே கருத்துக்களை பல கன்னட அறிஞரும் கூறினர். நம் நூலை பற்றி வேறு மொழிக்காரன் பெருமையாக அவர் மொழியில் பேசுவதை கேட்கும் பொழுது மனம் குளிர்ச்சி அடைந்தது. நாம் பெரிய இலக்கிய செல்வந்தர்கள் - 2000 ஆண்டுகால செல்வத்திற்கு சொந்தக்காரர்கள் என்று என்னை நானே நினைவு படுத்தி கொண்டேன்.

பிறகு விழா முடிவடைந்தது. மொத்தத்தில் கர்நாடக தமிழனான எனக்கு, பெரும் மன மகிழ்ச்சி, மன நிம்மதி. திருக்குறள் கன்னட மொழி பெயர்ப்பு, குறளோவியம் கன்னட மொழி பெயர்ப்பு நூல்கள் இலவசமாக கொடுக்கப்பட்டன. திருக்குறள் கன்னடரிடையே ஒரு தாக்கத்தை ஏற்படுத்த தொடங்கிவிட்டதை உணர முடிந்தது. இந்த இரு மாநிலங்களும் சுமூகமான உறவை மேற்கொண்டால் கர்நாடக வாழ் தமிழர்களுக்கு ஒரு பாதுகாப்பு தான். அதற்கும், இரு முதல்வர்களுக்கும் இந்த தமிழன் தலை வணங்குகிறான்.




Thursday, June 02, 2005

குழந்தைகள் - காலீல் கிப்ரான்

எனக்கு மிகவும் பிடித்த கவிஞர்களுள் காலீல் கிப்ரானும்
ஒருவர். அவருடைய "குழந்தைகள்" என்னும் கவிதையின்
தமிழாக்கம் இதோ:

உங்கள் குழந்தைகள்- உங்கள் குழந்தைகளல்ல
வாழ்வின் சுய ஏக்கத்தினால் வந்தவர் அவர்கள்

உங்கள் வழியாக வந்து இருந்தாலும் -
அவர்கள் உங்களிடம் இருந்து வரவில்லை

உங்களுடன் இருந்தாலும்
அவர்கள் உங்களுக்கு சொந்தமில்லை

உங்கள் அன்பை நீங்கள் அவர்களுக்கு அளிக்கலாம்
உங்கள் எண்ணங்களையல்ல - ஏனெனில்
அவர்களுக்கு சொந்த எண்ணங்களுண்டு!

அவர்கள் உடலை நீங்கள் வீட்டில் வைக்கலாம்
அவர்கள் ஆன்மாக்களையல்ல - ஏனெனில்

அவர்கள் ஆன்மாக்கள் நாளைய வீட்டில் வசிக்கின்றன
உங்கள் கனவில் கூட நீங்கள் அங்கு செல்ல முடியாது

அவர்களைப் போல் இருக்க முயற்ச்சிக்கலாம் நீங்கள்
உங்களைப்போல் அவர்களை ஆக்கி விடாதீர்கள் - ஏனெனில்
வாழ்க்கை பின் நோக்கிப் போவதில்லை, நேற்றிலும் நிற்பதில்லை

வில்லான உங்களிடமிருந்து புறப்படும் உயிர் அம்புகள் அவர்கள்

உங்கள் அம்புகள் விரைவாகவும் வேகமாகவும் செல்ல
உங்களை வளைய வைத்து இயற்க்கை தன் இலக்கை நோக்கி
தன் பாதையில் அம்புகளை செலுத்துகிறது

அதை உணர்ந்து இயற்க்கையின் கையில்
அன்போடு வளையுங்கள் - ஏனெனில்
இயற்க்கை விரும்புவது வேகமான அம்பை மட்டுமல்ல
உறுதியான வில்லைக்கூடத்தான்!

Tuesday, May 17, 2005

என் மனதை மிகவும் தொட்ட கவிதை: IF

If you can keep your head when all about you
Are losing theirs and blaming it on you;
If you can trust yourself when all men doubt you,
But make allowance for their doubting too;
If you can wait and not be tired by waiting,
Or, being lied about, don't deal in lies,
Or being hated don't give way to hating,
And yet don't look too good, nor talk too wise;

If you can dream - and not make dreams your master;
If you can think - and not make thoughts your aim,
If you can meet Triumph and Disaster
And treat those two impostors just the same;
If you can bear to hear the truth you've spoken
Twisted by knaves to make a trap for fools,
Or watch the things you gave your life to, broken,
And stoop and build 'em up with worn-out tools;

If you can make one heap of all your winnings
And risk it on one turn of pitch-and-toss,
And lose, and start again at your beginnings,
And never breathe a word about your loss;
If you can force your heart and nerve and sinew
To serve your turn long after they are gone,
And so hold on when there is nothing in you
Except the Will which says to them: "Hold on!"

If you can talk with crowds and keep your virtue,
Or walk with Kings - nor lose the common touch,
If neither foes nor loving friends can hurt you,
If all men count with you, but none too much:

If you can fill the unforgiving minute
With sixty seconds' worth of distance run,
Yours is the Earth and everything that's in it,
And - which is more - you'll be a Man, my son!

-Rudyard Kipling (1865-1936)

வணக்கம்!!!

உங்கள் வரவு நல்வரவாகட்டும்!