கன்னட பத்திரிக்கையாளர் பத்மராஜு தன்டாவதி
-கன்னட பத்திரிகை ப்ரஜாவாணியில் வெளிவந்தது (Aug 8 2009)
திருவள்ளுவர் தமிழ் நாட்டை சேர்ந்தவர். பெரும் புலவர், ஏசு கிறிஸ்து பிறப்பதற்கு முப்பது ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர். அவர் வெறும் புலவர் மட்டுமல்ல, மகா ஞானி. அவர் எழுதியது திருக்குறள் - 133 அதிகாரங்கள், 1330 குறள்கள்.
அறம், பொருள், இன்பம் என்று மூன்று பாகங்களில் எப்படி வாழ வேண்டும் என்பதை காட்டிவிட்டார். வாழும் கலையை சொல்லி விட்டார்.
திருக்குறள் காட்டும் நீதி ஒருவருக்கு அல்ல. ஒரு சமூகத்திற்கு அல்ல. ஒரு மதத்திற்கு அல்ல. உலகில் வாழும் ஒவ்வொரு மனிதருக்கும் பொருந்தும்.
தமிழ்நாடு தந்த திருவள்ளுவரை போல ஒருவரை எந்த ஒரு மாநிலமும் தந்தது இல்லை, தரப்போவதும் இல்லை.
திருவள்ளுவருடைய சாதி, மதம் தெரியாது. சைவர், வைஷ்ணவர், சமணர், புத்த மதங்கள் வள்ளுவரை சொந்தம் கொண்டாடுகின்றன. அனால் அவர் மதங்களை கடந்தவர். மனித குலமே அவரது குலம் என்பது மட்டுமே உண்மை.
பெங்களூர் அலசூர் தமிழ் சங்கம் அருகே திருவள்ளுவர் சிலை வைக்கப்பட்டது. அனால் சிலையை திறக்க கன்னட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. அப்போது திருவள்ளுவர் பற்றி தெரிந்து கொள்ள எனக்கு ஆர்வம் ஏற்பட்டது. படித்து தெரிந்து கொண்டேன். கன்னட அமைப்புகளின் எதிர்ப்பு எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
நமக்கு பக்கத்தில் இருக்கும் மாநிலத்தில் வாழ்ந்த ஒரு பெரும் புலவரை நாம் அறிந்து கொள்ளாமல், தெரிந்து கொள்ளாமல் இருக்கிறோமே என்ற வேதனை என் நெஞ்சத்தை வாட்டியது.
நாம் எதை எதிர்க்க வேண்டும்? தமிழ்நாடு - கர்நாடகம் இடையே நீண்டகாலமாக நிலவி வரும் பிரிச்சனைகளுக்கும், திருவள்ளுவர் சிலைக்கும் என்ன சம்பந்தம்? சிலை திறப்பை ஏன் எதிர்க்க வேண்டும்?
பெங்களூரில் திருவள்ளுவர் சிலை திறக்கபடுகிறது. அதே போல சென்னையில் சர்வக்ஞர் சிலை திறக்கப்படுகிறது. இரு மாநில அரசுகளும் இதை ஒப்புக்கொண்டு இருக்கிறது.
தமிழ்நாடு முதல்வர் கருணாநிதி பெங்களூரில் திருவள்ளுவர் சிலை திறக்கிறார். கர்நாடக முதல்வர் எடியூரப்பா சென்னையில் சர்வக்ஞர் சிலை திறக்கிறார். எவ்வளவு மகத்தான நிகழ்வு இது? இதை விட வேறு என்ன வேண்டும்? இரு மாநில மக்களும் பெருமைப்பட வேண்டிய விடையமல்லையா இது? 18 ஆண்டுகளாக திருவள்ளுவர் சிலை மூடிக்கிடக்கிறது.
கன்னட பவனில் 6 ஆண்டுகளாக சர்வக்ஞர் சிலை கிடக்கிறது. இது வேதனை இல்லையா? கன்னட அமைப்புகள் இதன் மூலம் என்ன சாதித்து விட்டார்கள்?
திருவள்ளுவர், சர்வக்ஞர் போன்றோர் வெறும் கவிஞர்களோ, புலவர்களோ அல்ல. அவர்கள் மனித குலத்தை வாழ வைக்க, வழிகாட்ட வந்த ஞானிகள். அவர்களை கட்டிப்போடலாமா? அவர்களை ஒரு மாநிலத்துக்குள்ளே அடைத்து வைக்கலாமா?
பம்பா, குவெம்பு, கார், மாஸ்தி, ஆனந்தமுர்த்தி, பீம்சேன் ஜோஷி, கங்குபாய், குமார கந்தர்வா ஆகியோரை இந்த மாநிலத்துக்கு மட்டுமே உரியவர்கள் என்று கூறலாமா?
கன்னட இலக்கியங்கள் வேறு மொழிகளில் பெயர்க்கப்பட்டுள்ளன. அவைகளை அந்தந்த மொழி பேசும் மக்கள் ஏற்று கொள்ள வில்லையா? அங்கு அவை மொழி, இனம், மாநிலம், எல்லாம் கடந்தல்லவா நிற்கிறது? பைபிள், குரானை அடுத்து உலகில் அதிகமான மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டிருப்பது திருக்குறள் தான். அது எப்படி சாத்தியமானது?
சில தினங்களுக்கு முன்பு தான் வீரப்ப மொய்லி எழுதிய ராமாயண புத்தகத்தை தமிழக முதல்வர் கருணாநிதி வெளியிட்டார். அதற்கும் முன்பாக கன்னட மூத்த அறிஞர் நாவல் ஆசிரியர் சேஷ நாராயணாவுக்கு தமிழ் மற்றும் கன்னட மொழிகளில் மொழி பெயர்ப்பு செய்ததற்காக தமிழக அரசின் உயரிய கலை மாமணி விருது வழங்கி கவுரவப்படுத்தியுள்ளது. இப்படி நாம் யாரையாவது பெருமை படுத்தி இருக்கிறோமா?
ராமேஸ்வர் தாகூர் கவர்னாராக இருத்த பொது ஆந்திராவை சேர்ந்த ராஜலட்சுமி என்பவரை பெங்களூர் பல்கலை கழக சிண்டிகேட் உறுப்பினராக நியமித்தார். அதை நாம் சகித்து கொள்ளவில்லை. எதிர்த்தோம். அவருடைய அறிவு, திறமை பற்றி யாருக்கும் சந்தேகம் இல்லை. அவர் ஆந்திராவை சேர்ந்தவர் என்ற ஒரே காரணத்தால் எதிர்த்தோம்.
ஆனால் நம்முடைய அனந்த மூர்த்தியை கேரளா காந்தி பல்கலைகழகத்து துணை வேந்தராக அதற்கு முன்பே நியமிக்கப்பட்டு இருந்தது நமது கவனத்துக்கு ஏனோ வரவில்லை.
பி. வி. காரந்த் அவர்களை மத்திய பிரதேச அரசும் அழைத்து பதவி வழங்கி கவுரவித்தது. சமீபத்தில் கர்நாடகத்தை சேர்ந்த ஏன். எஸ். ராமேகவுடா சிக்கிம் மாநில துணை வேந்தராக நியம்மிக்கபட்டார். அப்போதெல்லாம் நாம் வாய் மூடி மவுனமாக இருந்தோம்.
தமிழ் நாட்டோடு காவேரி நதி நீர் பிரச்சனை இருப்பது உண்மைதான். காவேரி காலம் காலமாக தமிழ்நாட்டிலும் பாய்ந்து வருகிறது. தமிழ்நாடு கர்நாடகத்தை விட தாழ்வான நிலப்பகுதி. திருவள்ளுவர் சிலையை திறக்கவிடாமல் தடுத்து விட்டால் காவேரி கர்நாடகத்தோடு மட்டுமே நின்று விடுமா என்ன?
திருவள்ளுவர் சாதி மதங்களை கடந்த புலவர். சர்வக்ஞர் தாழ்ந்த கும்பார வகுப்பை சேர்ந்தவர். அவர்கள் உயர்ந்த வகுப்பை சேர்ந்து இருந்தால் எந்த தடையும் வந்து இருக்காது. எதையும் ஆராய்ந்து பார்க்காமல் பிரச்சனைக்கு வழி ஏற்படாது. திருவள்ளுவர் மொழியை கடந்தவர். அவருக்கு வைக்கப்படும் சிலை ஒரு அடையாளம். அவர் அனைவருக்கும் பொதுவானவர்.
கன்யாகுமரயில் திருவள்ளுவரது 133 அடி சிலை உள்ளது. அத்தகைய உன்னதமான ஒருவரது சிலையை பெங்களூரில் திறப்பதை யாரும் தடுக்க வேண்டாம். அவ்வாறு தடுத்தால் கன்னடியர்கள் சிறுமை படைத்தவர்கள். குறுகிய மனம் கொண்டவர்கள் என்ற பழிச்சொல்லுக்கு ஆளாக நேரிடும். அது நமக்கு வேண்டாம்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment